அதிகாரிகள் குழு ஆய்வில் தெருவில் மீட்கப்பட்ட சிறுவன் மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

தஞ்சை, பிப். 20: தஞ்சை பகுதியில் தஞ்சாவூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சித்தார்த்தன் தலைமையில் தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் கவி அரசு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர் பிரபாகரன், குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி, சைல்டு லைன் உறுப்பினர் சத்யராஜ், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மாரியம்மாள், ராஜராஜன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தங்கபாண்டி, சரவணன், மகாலட்சுமி, கீதா ஆய்வு செய்தனர். அதன்படி தஞ்சை கரந்தை தற்காலிக பேருந்து நிலையம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், காசுகடைத்தெரு ஆகிய பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப், மார்டன் ரைஸ் மில்லில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் காசுக்கடைத் தெருவில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் 30க்கும் மேற்பட்ட பட்டறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது தஞ்சை தற்காலிக பேருந்து நிலையம் அருகில் சுற்றி திரிந்த 12 வயது சிறுவனை அழைத்து விசாரித்தபோது அவனது பெயர் நித்திஷ் என்பதும், தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்ததும், தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் சரிவர பள்ளிக்கு செல்ல முடியவில்லையென தெரிவித்தான். இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சிறுவனை அழைத்து சென்ற ஆய்வு குழுவினர், சிறுவன் தொடர்ந்து படிக்க தேவையான அனைத்து உதவிகளை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து பள்ளியில் மீண்டும் சிறுவன் சேர்க்கப்பட்டான். மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. அவ்வாறு பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 2ம் சேர்த்து தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என ஆய்வின்போது விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆங்காங்கு ஒட்டப்பட்டன.

Related Stories: