×

தலைஞாயிறுக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு கொறுக்கை ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருத்துறைப்பூண்டி, பிப்.20: கொறுக்கையில் இருந்து தலைஞாயிறுக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சியில் 1,800 குடும்ப அட்டைகள் உள்ளது. சுமார் 5,550 பேர் வசித்து வருகின்றனர். 5 அங்கன்வாடிகள், 5 பள்ளிகள் இயங்கி வருகிறது. 9 குக்கிராமங்களில் 8 குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது ஒன்றரை லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல கொறுக்கையில் உள்ள தரைமட்ட குடிநீர் தேக்க தொட்டியிலிருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் ஒரடியம்புலத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வள கல்லூரிக்கு குடிநீர் கொண்டு செல்ல டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு அனுமதிக்க முடியாது, பணிகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் தலைமையில் நேற்று கொறுக்கை ஊராட்சி மன்றதலைவர் ஜானகிராமன் மற்றும் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கொறுக்கை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிமாக விலக்கி கொள்ளப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும என்று போரட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags : headquarters ,
× RELATED தலைமை செயலகத்தில் உள்ள உணவகங்கள் திடீர் மூடல்