வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

திருச்சி, பிப்.20: திருச்சி மாநகராட்சி ரங்கம் கோட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கி கொடுத்த பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் பல ஆண்டாக காய்கறி வியபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரங்கம் பகுதியில் கடந்த 10 வாரங்களாக வியாழக்கிழமை கீதாபுரத்திலும், திங்கட்கிழமை தெப்பக்குளம் தெரு பகுதியிலும் தனியார் காய்கறி வாரச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி இடத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காய்கறி வியாபாரிகள் மாநகராட்சி ஆணையர், உதவி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோரிடம் தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மனு அளித்தனர்.இதற்கிடையே மேலும் இரண்டு இடங்களில் தனியார் காய்கறி சந்தை வரப்போவதாக தகவல் வந்ததை அடுத்து, ரங்கம் காய்கறி வியாபாரிகள் ரங்கம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ரங்கம் காய்கறி வியபார சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ராஜூ, ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ், துணை செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தகவலறிந்த ரங்கம் எஸ்ஐ கோபிநாத் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், மாநகராட்சி உதவி ஆணையர் வைத்தியநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. ‘வாரச்சந்தைகளுக்கு மாநகராட்சி அனுமதி தரவில்லை. தனியார் இடங்களில் நடத்தும் வார சந்தைகளை மாநகராட்சி தடுத்து நிறுத்த முடியாது. சட்டத்துக்குட்பட்ட வரி விதிக்க முடியும். அவர்கள் அனுமதி கேட்டுள்ளனர். அது பரிசீலனையில் தான் உள்ளது. அவர்களுக்கு அனுமதி வழங்கியதாக கூறுவது பொய். வியாபாரிகள் நீங்கள் பேசி, ஒரு முடிவுக்கு வாருங்கள். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கலாம்’ என்றார். இதையடுத்து காய்கறி வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: