தானியங்கி உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்பு

திருச்சி, பிப். 20: தானியங்கி உற்பத்தி துறையில் தான் அதிகம் வேலை வாய்ப்பு உள்ளதாக எஸ்ஐடி கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்பக் கல்லூரியில், ‘தொழிற்சாலை உற்பத்தி தானியக்கம்(புராசஸ் ஆட்டோமேஷன்) குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் விஜயகுமார் தலைமை வகித்தார். கருவியியல் துறைத்தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள யோகோகாவா இந்தியா நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் மோகன் பேசுகையில், தொழில்நுட்ப உலகம் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி துறையை சார்ந்தே இயங்கி வருகிறது. விரைவில் மனிதனின் அனைத்து செயல்பாடுகளும் தானியங்கியாக மாறிவிடும். ஏற்கனவே விவசாயம், நெசவு மற்றும் தொழில்துறைகளை தானியங்கி முறை ஆக்கிரமித்துள்ளது. உலக நாடுகள் பல, இதில் தொடர் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் இந்தியா தற்போதுதான் பிற நாடுகளின் தொழில்நிறுவனங்களுடன் கைகோர்த்து வருகிறது. எனவே மாணவர்கள் எல்லா காலங்களிலும் வளர்ச்சி தரும் உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும்.

Advertising
Advertising

இந்த துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தரும். துறைசார் வல்லுனர்களுக்கு தொழில்நிறுவனங்களில் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு, தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அத்துடன் கல்லூரி, தொழில்நிறுவனங்களுக்கு இடையே மாணவர் திறன் வளர்ப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு களப்பணி மற்றும் தொழிற்பயிற்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முதுநிலை விரிவுரையாளர்கள் அண்ணாமலை, பழனிராஜ், உஷாராணி, மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: