சமூக மாற்றத்துக்கான மையங்களாக கல்வி நிறுவனங்கள் மாற வேண்டும்

திருச்சி, பிப்.20: திருச்சி தேசிய கல்லூரி மற்றும் சிக்ஷா சன்ஸ்கிரிதி உத்தான் நியாஸ் (எஸ்எஸ்யுஎன்) இணைந்து ஞானோத்சவ்-2020 என்ற கல்வி மாநாடு கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவங்கி வைத்து பேசியதாவது: தாய்மொழியில் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, மதிப்பு அடிப்படையிலான கல்வி, தரம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்வி, ஆளுமை திறன் மேம்பாடு ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த மாநாடு நடைபெறுவது மன நிறைவை தருகிறது. இந்தியாவில் குருகுல கல்வி முறை துவங்கி இன்று வரை உயர்கல்வி முறை அடிப்படை மதிப்புகளை கொண்டு வலுவானதாக இருந்து வருகிறது. பழங்காலத்தில் இந்தியாவில் சர்வதேச தரத்திலான நாளந்தா, தக்ஷசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் இருந்து கல்வியாளர்களை ஈர்த்தன. கற்றல், கற்பித்தல் மூலம் அறிவார்ந்த சமூகத்தை வளர்த்தெடுப்பதில் இத்தகைய கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திறன் வளர்ப்பில் அக்கறை காட்டாமல், காலனி ஆதிக்க தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கல்வி முறை பயணிக்கத் துவங்கியது. நாடு சுதந்திரம் பெற்ற பின் உயர்கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. நாட்டில் 993 பல்கலைக்கழங்களும், 39,931 கல்லூரிகளும் உள்ளன. நாட்டில் உயர்கல்வி பயில பதிவு செய்வோரின் எண்ணிக்கை 25.8 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 49.3 சதவீதமாக உள்ளது பெருமைக்குரிய தகவல்.

Advertising
Advertising

தமிழகத்தில் 59 பல்கலைக்கழகங்களும், 2,466 கல்லூரிகளும் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுக்கு 8.46 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வெளியே வருகின்றனர். 130 கோடி மக்களில் 70 கோடி பேர் இளையோர்கள். இவர்களுக்கு முறையான கல்வி போதித்து, சரியான பயிற்சி அளித்தால் அடுத்த 30-40 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கு சாத்தியமான தரமான வேலை குழுக்கள் கிடைக்கும். தாய்மொழிகளின் பரவலை ஊக்குவிக்க அனைத்து நகர்வுகளும் மொழியியல் பன்முகத்தன்மையும், பன்மொழி கல்வியையும் ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள மொழியியல் மற்றும் கலாச்சார மரபுகள் பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. கல்வி நிறுவனங்கள் சமூக மாற்றத்துக்கான மையங்களாக மாற வேண்டும். கல்வி நிறுவனங்கள் கிராமங்களை தத்தெடுத்து மத்திய, மாநில அரசு திட்டங்கள் கிராம மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். நம் தேவைகளை குறைத்துக் கொண்டாலே லஞ்சம் தவிர்த்த, நெஞ்சம் நிமிர்த்த வாழலாம். மத, கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தால் யாரும் பயத்தில் தவறு செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் சுந்தர்ராமன் வரவேற்றார். பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மணிசங்கர், எஸ்எஸ்யுஎன் தேசிய செயலாளர் அதுல்கோதாரி, தென் மண்டல கன்வீனர் வினோத், கல்லூரி முன்னாள் முதல்வர் அன்பரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: