×

காஞ்சிபுரம் அருகே கவேரிப்பாக்கம் ஏரியில் தூர்வார டெண்டர் எடுத்து மண் விற்பனை அமோகம்

காஞ்சிபுரம், பிப்.20: காஞ்சிபுரம் அருகே பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியை தூர்வார டெண்டர் எடுத்து, அனுமதி இல்லாமல்  நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளுக்கு மண் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கனிமவளக் கொள்ளை அமோகமாக நடக்கிறது. காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியைத் தூர்வார பொதுப்பணித் துறை, புவியியல் மற்றும் கனிமவளத் துறையும் அனுமதி அளித்துள்ளது. டெண்டரில் குறிப்பிட்டுள்ளபடி ஏரியில், 3 அடி ஆழத்துக்கு மட்டுமே தூர்வார வேண்டும். அதேபோல், தூர்வாரப்படும் மண், ஏரியின் கரைகளில் கொட்டி அவற்றை பலப்படுத்த வேண்டும் என்று விதிமுறை உள்ளது. மேலும் அதிகப்படியாக எடுக்கப்படும் மண்ணை ஏரியில் இருந்து வெளிபகுதியில் இருக்கும் வரத்து கால்வாயின் குறுக்கே அணைகள் கட்டவும், ஏற்கனவே இருக்கும் அணைகள் வலுவிழந்து காணப்பட்டால் அதை பலப்படுத்தவும் பயன்படுத்த வேண்டும். வரத்து கால்வாய் கரைகளை பலப்படுத்தவும், புதிய வடிகால் அமைக்கவும் ஏரியில் இருந்து எடுக்கப்படும் களிமண்ணை பயன்படுத்த வேண்டும் என விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இதற்கு விதிவிலக்காக விவசாயப் பணிகளுக்கு மண் எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட சிலர், விவசாயிகள் போர்வையில் ஏரியில் அதிகளவில், 20 அடி ஆழம் வரை தோண்டி மண்ணையும், அதன் கீழ் கிடைக்கும் மணலையும் எடுப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நேருவிடம் கேட்டபோது, சிறுகாவேரிப்பாக்கம் ஏரியில் அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக வண்டல் மண் எடுக்கப்படுகிறது. இதனால் கனிமவளம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் அதள பாதாளத்துக்கு சென்றுவிடும். இதனால் நாளடைவில் இப்பகுதியில் விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே,  மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இத்தகையை மோசடிகளை தடுக்க வேண்டும். மேலும், ஏரிகளில்  தூர்வாரப்பட்ட மண்ணை அந்த ஏரிக்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். ஏரியின் கரையை பலப்படுத்தவும், ஏரிக்கு வரக்கூடிய வரத்து கால்வாய்கள், அணைகள் கட்டவும் இந்த மண்ணை பயன்படுத்த வேண்டும் என்றார்.

ஒரு லோடுக்கு ₹7,500
தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் அவற்றை எடுத்துச் சென்று அருகில் உள்ள முசரவாக்கம், கிளார், மேல் ஒட்டிவாக்கம், களக்காட்டூர், களத்தூர் ஆகிய கிராமங்களில் இயங்கும் அனுமதி பெறாத நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளுக்கு, ஒரு லோடு லாரி மண் ₹5 ஆயிரம் முதல் ₹7500 வரை விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags : Kaveripakkam ,Kanchipuram ,lake ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...