×

கார் மீது அரசு பஸ் மோதி 6 மாணவ, மாணவிகள் படுகாயம்

செங்கல்பட்டு, பிப்.20: செங்கல்பட்டு அருகே மாணவ, மாணவிகள் சென்ற கார் மீது, அரசு பஸ் மோதி 6 படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு, செங்கல்பட்டு அடுத்த திருத்தேரி, சிங்கபெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் இருந்து 12 மாணவ, மாணவிகள் தனியார் கார் மூலம்  தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், வழக்கம்போல், நேற்று மாலை  பள்ளி முடிந்து, மாணவ, மாணவிகள் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். காரை மூர்த்தி என்பவர் ஓட்டினார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிங்கபெருமாள் கோயில் அருகே கார் சென்றபோது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ், கார் மீது வேகமாக மோதியது. இதில்  கார், தலை குப்புற நடு ரோட்டில் கவிழ்ந்தது. அரசு பஸ் கண்ணாடி உடைந்தது.இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காரில் சிக்கிய 12 மாணவ, மாணவிகளை  மீட்டனர். அதில், படுகாயமடைந்த  கவி, திபக், சக்திவேல், மோகனபிரியா, தர்ஸன், தேவி ஆகியோரை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அரசு பஸ் டிரைவரை தேடிவருகின்றனர். இந்த விபத்தால் ஒரு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...