×

கொக்கிலமேடு கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் 42 பேர் நீக்கம்

மாமல்லபுரம், பிப்.20: மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் 42 பேரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர். மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு ஊராட்சியில் மொத்தம் 1067 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கொக்கிலமேடு ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர், மீனவர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல்,  நீக்கலின்போது அந்த பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர், மெத்தனப் போக்குடன் செயல்பட்டு, ஏற்கனவே பட்டியலில் இருந்த 42 வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இறந்து போன வாக்காளரின் பெயர்களை, பட்டியலில் இருந்து நீக்காமல் அந்த பெயர்கள் அப்படியே பட்டியலில் உள்ளதுபோல் புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இணையதளத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது, தங்களது பெயர்கள் நீக்கப்பட்ட கண்டு 42 வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக, கொக்கிலமேடு பகுதியை சேர்ந்த 42 பேர், முன்னாள் ஊராட்சி தலைவர் தெய்வநாயகி கோதண்டராமன் தலைமையில் கூட்டமாக சென்று திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலரிடம் 42 பேரும் கையெழுத்திட்டு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கொக்கிலமேடு ஊராட்சி வரைவு வாக்காளர் பட்டியலில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், இறந்து போன வாக்காளர்களின் பெயர்கள் நீக்காமல் உள்ளன. ஆனால், உயிரோடு உள்ள தங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த 15 முதல் 20 ஆண்டு நடந்து முடிந்த தேர்தல்களில் வாக்களித்து வரும் எங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்பட அனைத்து ஆவணங்களுடன் வசிக்கும் எங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை தடுக்கும் வகையில், பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மெத்தன போக்குடன் செயல்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரித்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீக்கப்பட்ட தங்கள் பெயர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேலும், வருவாய் துறை மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் தனித் தனியாக மனு அனுப்பியுள்ளனர்.

Tags : village ,Kokkilamedu ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...