×

குண்ணவாக்கம் ஊராட்சியில் தொடர் திருட்டால் பொதுமக்கள் கடும் பீதி

வாலாஜாபாத், பிப். 20: குண்ணவாக்கம் ஊராட்சியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை சம்பந்தப்பட்ட போலீசாரும் கண்டு கொள்வதில்லை, அதனை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கண்காணிப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் குண்ணவாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும், ஊராட்சியின் முக்கிய தொழிலான கல் அரவை இயந்திரங்கள், தொழிற்சாலைகள் என 10க்கும் மேற்பட்டவைகள் இயங்குகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் செயல்பட்டுவரும் அரவை இயந்திர தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் இயந்திரங்களின் பாகங்களும், தேவையின்றி கிடக்கும்  இரும்பு பொருட்களும் தொடர்ந்து திருடு போவதாக, தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்படுகிறது.

ஆனால் போலீசார், புகாரை பெற்று கொள்வதுடன் தங்களது கடமை முடிந்துவிட்டது என, அடுத்த பணியை தொடராமல் கிடப்பில் போடுவதாகவும், அதனால், நள்ளிரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுபற்றி மாவட்ட எஸ்பியின் கவனத்துக்கு கொண்டு சென்றாலும், அதனை உயர் அதிகாரிகள் கண்காணிக்கவோ, காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் பணிகள் குறித்து ஆய்வு செய்து விசாரிக்கவோ கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஒரகடம் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து அடிக்கடி தகவல் தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் கையூட்டு பெற்று கொண்டு, தொடர் திருட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பரபரப்பு புகார் எழுந்துள்ளது.




Tags : Theft ,Kunnavakkam ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது