×

பிள்ளையார்குப்பம், பூதேரியில் பகுதி நேர ரேஷன்கடை அமைக்க வேண்டும்

வாலாஜாபாத், பிப்.20: வாலாஜாபாத் ஒன்றியம் நாய்க்கன்குப்பம் ஊராட்சி பிள்ளையார்குப்பம், பூதேரி ஆகிய கிராமங்களில் பகுதி நேரரேஷன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம் நாய்க்கன்குப்பம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதே ஊராட்சியில் ஓடந்தாங்கல், பிள்ளையார்குப்பம், பூதேரி என ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களும் நாயக்கன்குப்பம் ஊராட்சியில் இருந்து 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன.இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக தென்னேரி, கட்டவாக்கம், ஊத்துக்காடு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இதில், பிள்ளையார்குப்பம் மற்றும் பூதேரி  ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, 3 கிமீ தூரத்தில் ஊத்துக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ரேஷன்கடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த ரேஷன்கடைகளில் எந்த நாட்களில் என்னென்ன பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது என்பதை அறியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் நாயக்கன்குப்பம் ஊராட்சியில் பிள்ளையார்குப்பம் மற்றும் பூதேரி கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்வதற்கு, 3 கிமீ தூரம் உள்ள ஊத்துக்காடு ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். அங்கு, என்னென்ன பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது என்பதை எங்களால் அறிய முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள உறவினர்களை அணுகிய பிறகே, ரேஷன்கடை திறக்கப்பட்டுள்ளதா, என்னென்ன பொருட்கள் விநியோகம் செய்கிறார்கள் என அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் வேலைக்கு செல்வதால், வீட்டில் உள்ள முதியவர்கள் சென்று, ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். அதையும், அவர்களால் சுமந்து வர முடியாததால், யார் உதவியை நாடி, பொருட்களை மீண்டும் வீட்டுக்கு எடுத்து வரவேண்டி நிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதனால், மாவட்ட நிர்வாகம் பூதேரி மற்றும் பிள்ளையார்குப்பம் கிராமற பகுதிகளில் பகுதி நேர ரேஷன்கடை திறந்தால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Tags : Pillaiyarkuppam ,ration shop ,Puducherry ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி