×

சோழவரம் ஊராட்சியில் சமுதாய கூடத்தை ஆக்கிரமித்த பறிமுதல் வாகனங்கள்

புழல், பிப். 20: சோழவரம் ஊராட்சியில் புதிதாக கட்டுமானபணி நடக்கும் சமுதாய கூட வளாகத்தை ஆக்கிரமித்து போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.சோழவரம் ஊராட்சி சார்பில், கடந்த 2016-17ம் ஆண்டில், சென்னை பெருநகர வளர்ச்சி குழும திட்டத்தின் கீழ் ₹30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 90 சதவிகித பணிகள் முடிந்து, சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த சமுதாயநலக் கூட கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், சோழவரம் போலீசாரால் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் லாரிகள் உள்பட பல்வேறு வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் சமுதாய நலக்கூடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் பலமுறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டும், இன்றுவரை அந்த பறிமுதல் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. எனவே, இங்கு விரைவில் புதிய சமுதாயநலக் கூட கட்டுமானப் பணிகள் முடிவதற்கு, அந்த வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : community hall ,Cholavaram ,
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்