×

ராள்ளபாடி சுடுகாட்டில் குப்பைகள் அகற்றம்

ஊத்துக்கோட்டை, பிப். 20:பெரியபாளையம்-புதுவாயல்  சாலையில்  ராள்ளபாடி சுடுகாட்டில் கொட்டப்பட்ட குப்பைகள், ‘தினகரன்’ செய்தி எதிரொலியால் அதிரடியாக அகற்றப்பட்டது. குப்பை கிடங்கு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியபாளையம்  ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பண்டங்களை உண்டு விட்டு, அங்கேயே குப்பைகளை போட்டுவிட்டு செல்கிறார்கள். இவ்வாறு பக்தர்கள் போடும் குப்பைகளும், கடை மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளையும்,  பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை வண்டியில் எடுத்துச் சென்று பெரியபாளையம்-புதுவாயல்  சாலையில் உள்ள மயானத்தில்  கொட்டுகிறார்கள். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

அந்த குப்பைகளை ஒரு சில நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் தீயிட்டு கொளுத்துகிறார்கள். இதனால், அங்கு கரும்புகை ஏற்பட்டு வாகன ஓட்டிகளின் கண்கள்  எரிச்சல் ஏற்படுகிறது.  இது குறித்து, ‘தினகரன்’ நாளிதழில் கடந்த 18ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது, இதையறிந்த ஒன்றிய அலுவலர் ராமகிருஷ்ணன், பெரியபாளையம் ஊராட்சி தலைவர் லட்சுமி திருமலை, செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் ராள்ளபாடி சுடுகாட்டில் இருந்த குப்பைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால், ராள்ளபாடி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும், இங்கு குப்பைகள் கொட்டும் கிடங்கு கட்டப்படும் என ஒற்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்