×

தேனி ஐ.டி.ஐ. வழியாக புது பஸ் நிலையத்திற்கு திட்டச்சாலை நிலம் ஆர்ஜித பணிகள் தொடக்கம்

தேனி, பிப்.20: தேனி புதிய பஸ் நிலையம் தேனி நகர் பை-பாஸ் ரோட்டில் உள்ளது. சுமார் 7. 37 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ. 12 கோடியில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில் இருந்து தேனி வரும் பஸ்களும் தேனி வழியாக வந்து செல்லும் அனைத்து பஸ்சுகளும் இப்புதிய பஸ் நிலையத்திற்கே வந்து செல்கிறது. இப்புதிய பஸ் நிலையத்தின் கிழக்கே சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், 2 கி.மீ தொலைவில் வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், ஆயுதப்படை மைதானம் மற்றும் ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்கள் உள்ளன.

இவ்வலுலகங்களுக்கு செல்ல தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திட்டச் சாலை உள்ளது. இந்த திட்டச் சாலையானது கலெக்டர் அலுவலகம் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் செல்லும் பிரிவின் தெற்கு புறம் சாலை இல்லாமல் உள்ளது. தெற்கு புறம் சாலை இருந்தால் இச்சாலை தேனி அரசினர் ஐ.டி.ஐ அருகே மதுரை சாலையை சென்றடையலாம். மேலும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆண்டிபட்டி, வழியாக மதுரை, நெல்லை செல்லும் அனைத்து பஸ்களும் இப்புதிய திட்டச் சாலை வழியாக எளிதில் செல்ல முடியும். ஆனால் இச்சாலை அமையும் பகுதியானது அரசினர் ஐ.டி.ஐ. வளாகம் உள்ளது. இதனால் இத்திட்டச் சாலை அமைப்பதில் தடங்கல் இருந்து வந்தது. தற்போது திட்டச் சாலையை மதுரை சாலையில் இருந்து பஸ் நிலைய திட்டச் சாலையுடன் இணைக்க 40 அடி அகலத்தில் சுமார் 300 மீட்டர் தூரம், சாலை அமைக்க சுமார் 1.8 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்நிலம் தற்போது அரசினர் ஐ.டி.ஐ.யிடம் உள்ளதால் ஐ.டி.ஐ. நிலம் வழங்கினால் திட்டச் சாலை அமைத்து விடலாம்.

இதனை கருத்தில் கொண்டு தேனி நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியதன் பேரில் மாவட்ட நிர்வாகம் அரசினர் ஐ.டி.ஐ க்கு சொந்தமான சுமார் 1.82 ஏக்கர் நிலத்தை நகராட்சி திட்டச் சாலைக்கு வழங்க வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. அரசினர் ஐ.டி.ஐ வழங்கும் இடத்திற்கு நிகராக வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சுமார் 2.25 ஏக்கர் நிலத்தை அரசினர் ஐ.டி.ஐக்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து ஐ.டி ஐ. தரப்பில் கேட்ட போது திட்டச் சாலைக்கு நிலம் வழங்குவதற்காகவும், இந்நிலத்திற்கு பதிலாக வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் அருகே ஐ.டி.ஐக்கு 2.25 ஏக்கர் நிலம் பெறவும் தேவையான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன. இப்பணிகள் மிக விரைவில் நடக்கும் என்றனர்.

Tags : land ,bus station ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...