×

வங்கியில் லோன் தருவதாக மோசடி காவல்நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை

பெரியகுளம், பிப்.20: பெரியகுளம் தென்கரை பகுதியில் வசித்து வருபவர் வசந்தி. இவர் தனது மகள் மனிஷாவுடன் சேர்ந்து அகமலை மலைக்கிராம மலைவாழ் பழங்குடி இன மக்கள் 57 பேரிடம் பெரியகுளம் பகுதியில் உள்ள வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வசந்தியும், மனிஷாவும் மலைக்கிராம பழங்குடி இன மக்களை நாடி அவர்களின் ஆதார் மற்றும் குடும்ப அட்டையை கொடுத்தால் வங்கியில் ஒருவருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வங்கி கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

கடந்த 5 மாதங்களாக பல குழுக்கள் அமைத்து அவர்களை வங்கிக்கு அழைத்துச்சென்று கைரேகை பெற்று கடன் வாங்கியுள்ளனர். ஆனால் கடன் தொகையினை மலைவாழ் மக்களுக்கு வழங்காமல் தாங்களே வைத்துக்கொண்டு மலைவாழ் மக்களுக்கு ரூ.1000 மட்டும் வழங்கி மோசடி செய்துள்ளனர். கடன் தொகையினை திருப்பி செலுத்த வங்கியிலிருந்து மலைவாழ் மக்களிடம் கேட்டபோது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுவரை மலைவாழ் மக்களிடம் 57 பேரிடம் ரூ.20 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...