×

கீழப்பாவூர் வட்டார பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

பாவூர்சத்திரம், பிப்.20:  கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மகசூல் பாதிப்பால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் கீழப்பாவூர் பெரியகுளம், மேலப்பாவூர், மகிழ், சாலைப்புதூர், ஆவுடையானூர், மேலபட்டமுடையார்புரம் மற்றும் சுற்று வட்டார குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. வழக்கம்போல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நெல் நடுவைப்பணியை மேற்கொண்ட விவசாயிகளுக்கு இந்த அளவுக்கு அதிகமான மழை பல வழிகளில் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. நெல் நாற்று நட்ட காலங்களில் மழை விட்டு விட்டு பெய்து வந்ததால் பயிரில் குலை நோய் தாக்கியது. நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பல மருந்துகள் தெளித்தும் நோய் கட்டுபடவில்லை.   தற்போது அறுவடைப்பணி நடந்து வரும் வேளையில் நெல் மகசூல் பாதிக்கும் குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 22 மூட்டை நெல் கிடைக்கும். ஆனால் தற்போது 17 மூட்டைக்கும் குறைவாகவே ெநல் கிடைப்பதாகவும், செலவழித்த தொகை திரும்ப வருமா? எனவும் விவசாயிகள் வருத்தத்துடன் கூறினர்.
 மேலும் நோய் தாக்கத்தால் விளைச்சல் இல்லாமல் தவித்த நிலையில் விளைந்த நெல்லுக்கு விலையும் இல்லாத சூழ்நிலையில் இருக்கிறது. அறுவடைக்கு முன் மூட்டை ஒன்று ரூ.1,300க்கு விற்ற வந்த பொன்னி நெல் தற்போது ஆயிரத்துக்கும் குறைவாக வியாபாரிகள் கேட்கின்றனர். பல விவசாயிகள் அறுவடையை நம்பி வங்கியில் கடன் வாங்கியிருப்பதால் கடன் மற்றும் வட்டியை செலுத்த வேண்டிய சூழ்நிலையில் வியாபாரிகள் கேட்கும் விலைக்கு நெல்லை விற்கின்றனர். இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள்  கவலையுடன் தெரிவித்தனர்.

Tags : region ,Keelappavur ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!