×

திருப்புத்தூர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் தொடரும் நெரிசல், விபத்து

திருப்புத்தூர், பிப். 20: திருப்புத்தூர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் தொடர்ந்து கடும் நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் விபத்து அபாயமும் நிலவுகிறது. திருப்புத்தூரில் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் கடும் நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் நகர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். திருப்புத்தூரிலிருந்து எந்நேரத்திலும் எல்லா ஊர்களுக்கும் பஸ் வசதி உள்ளது. மேலும் அனைத்து ஊர்களுக்கும் செல்லக்கூடிய முக¢கிய சாலைகள் திருப்புத்தூர் வந்து செல்லும் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, தேவகோட்டை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கல்லல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்புத்தூர் நகருக்குள் தினந்தோறும் வந்து செல்கின்றது.

இதனால் திருப்புத்தூர் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. குறிப்பாக திருப்புத்தூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே அஞ்சலக வீதி செல்லும் சாலை, நான்கு ரோடு, காந்திசிலை, மதுரை ரோடு உள்ளிட்ட இடங்களில் காலை- மாலை நேரங்களில் ஏற்படும் கடும் நெரிசலால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் காத்திருந்து ரோட்டை கடந்த செல்ல வேண்டியுள்ளது. இந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததே இதற்கு காரணமாகும். மேலும் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

குறிப்பாக சைக்கிளில் செல்லும் மாணவர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். நேற்று மாலை கூட பள்ளி விட்டு சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்த சென்ற மாணவியின் சைக்கிள் மீது மூன்று பேர் வந்த டூவிலர் ஒன்று மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
எனவே காலையில் பள்ளி செல்லும் நேரத்திலும் மற்றும் மாலையில் பள்ளி விடும் நேரத்திலும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயும், மதுரை ரோடு அஞ்சலக வீதி சந்திப்பிலும், நான்கு ரோடு உள்ளிட்ட இங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : roads ,Thiruputhur ,accident ,
× RELATED புதிய பேருந்து நிலையத்தில்...