×

கீழக்கரையில் புதிய தாலுகா அலுவலகத்தை முதல்வர் திறந்து வைப்பாரா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கீழக்கரை, பிப்.20:  கீழக்கரையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய தாலுகா அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பாரா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கீழக்கரை கடந்த 2015ல் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஒரு பகுதியிலும், மலேரியா கிளினிக் வளாகத்தில் ஒரு பகுதியிலும் செயல்படுவதால் மக்கள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் இடநெருக்கடி ஏற்பட்டு தவித்து வருகின்றனர். இதனால் தனியாக புதிய தாலுகா அலுவலகம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கீழக்கரை தொழிலதிபர் ஒருவர் தனக்கு சொத்தமான இ.சி.ஆர் சாலையில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் நிலைத்தை அரசுக்கு தானமாக கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து அரசு ஒதுக்கிய 2கோடியே 20 லட்சம் நிதியில் புதிய தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு மாதங்கள் பல கடந்தும் இன்று வரை திறப்பு விழா காணாமல் இருக்கின்றது. அதை வரும் 1ம் தேதி ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கீழக்கரை தாலுகா அலுவலகத்தையும் திறந்து வைக்க வேண்டும் என்று கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இபுராகிம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு தினமும் கீழக்கரை, திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், ஏர்வாடி, காஞ்சிரங்குடி, பெரியபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் பணி நிமித்தம் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. ஆகவே புதிய தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் இருப்பதால், மருத்துவ கல்லூரியின் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழக்கரை தாலுகா அலுவலகத்தையும் திறந்து வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : CM ,taluk office ,suburbs ,public ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...