சிறப்பு எஸ்ஐயை தாக்கிய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை திருச்செந்தூர் கோர்ட் தீர்ப்பு

திருச்செந்தூர், பிப்.20: திருச்செந்தூரில் சிறப்பு எஸ்ஐயை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்த புளியங்குளத்தைச் சேர்ந்தவர் செல்லையா மகன் சேகர்(40), கூலித் தொழிலாளி. இவரும் இவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 12 பேர் கடந்த 6-6-2011 அன்று ஒரு வேனில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். தரிசனம் முடித்து ஊருக்கு திரும்பும் போது திருச்செந்தூர் வெயிலுகந்தஅம்மன் கோவில் அருகே வரும் போது எதிரே வந்த ஒரு மாருதி கார் மீது வேன் மோதியது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது.

அப்போது அங்கு வந்த திருச்செந்தூர் தாலுகா காவல்நிலைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் காளிஸ்வரன் இரு தரப்பினரையும் சமரசம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகரும் அவருடன் வந்த 11 பேரும் சேர்ந்து சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்  காளிஸ்வரனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில்  தாலுகா போலீசார், சேகர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இறுதி கட்ட விசாரணை நடந்தது. நீதிபதி பரமேஷ்வரி விசாரித்து சேகருக்கு 3ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10ஆயிரம் அபதாரமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நேரத்தில் ஒருவர் இறந்துவிட்டதால் மற்ற 10பேரை நீதிபதி வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ரவிச்சந்திரன் ஆஜரானார்.

Related Stories: