கோவில்பட்டி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணி குவிக்கப்பட்டுள்ள கற்களால் மக்கள், மாணவர்கள் அவதி

கோவில்பட்டி, பிப்.20: கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி சமத்துவபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  கோவில்பட்டியில் இருந்து கடலையூர் செல்லும் மெயின்ரோட்டில் லிங்கம்பட்டி கிராமம் உள்ளது. இங்கிருந்து சிறிது தொலைவில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மாணவ, மாணவியர் கோவில்பட்டியில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சமத்துவபுரத்தில் இருந்து நுழைவுவாசல் வரையிலான ஒரு கி.மீ தார் சாலை பராமரிக்கப்படாததால் பழுதடைந்து கிடக்கிறது. இந்த சாலையை சீரமைத்து புதிதாக தார்சாலை அமைக்ககோரி சமத்துவபுரம் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பழுதான சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சாலை தோண்டப்பட்டதோடு, புதிதாக தார்சாலை அமைப்பதற்காக சாலையோரங்களில் கற்கள் குவிக்கப்பட்டது. ஆனால் மாதங்கள் பல கடந்தும் இதுவரையில் புதிய தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சமத்துவபுரத்தில் வசித்து வரும் மக்கள் பழுதான சாலை மற்றும் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள கற்களால் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்

பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் சமத்துவபுரம் நுழைவுவாசல் முன்புறம் உள்ள காட்டுராமன்பட்டி விலக்கு பஸ் நிறுத்தத்திற்கு சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரும் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி வடக்கு மாவட்ட தலைவர் கனி கூறுகையில், கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி சமத்துவபுரத்தில புதியதாக தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கி பல மாதங்களாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே பழுதான சாலையை தோண்டி போட்டுள்ளதோடு, சாலையோரங்களில் ஜல்லிகற்கள் வரிசையாக குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடந்து செல்லவும், பைக்குகளில் செல்வவோரும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சமத்துவபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து துவங்கி சீரமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: