மெயின் ரோட்டில் பாலங்கள் கட்டாமல் சாலை அமைப்பதை கண்டித்து கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை காங். முற்றுகை

கோவில்பட்டி, பிப்.20: கோவில்பட்டியில் பிரதான சாலையில் பாலங்கள் கட்டாமல் சாலை அமைக்கப்பட்டதை கண்டித்தும், உடனடியாக பாலங்கள் கட்டக்கோரியும் ஆர்டிஓ அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி நகரில் லட்சுமிமில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து வேலாயுதபுரம் ரயில்வே மேம்பாலம் வரையிலான பிரதான சாலையை விரிவாக்கம் செய்து, இருபுறமும் வாறுகால் கட்டி, 4 இடங்களில் பாலம் கட்டுவதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால் ஒரு பாலம் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், பிரதான சாலையில் உள்ள மாதாங்கோவில் ரோடு, மார்க்கெட்ரோடு சந்திப்பு, புதுரோடு சந்திப்பு ஆகிய 3 இடங்களில் வாறுகால் மற்றும் பாலம் அமைக்காத நெடுஞ்சாலைத்துறையை கண்டித்தும், மேலும் நகரில் எட்டயபுரம் மெயின்ரோடு செண்பகவல்லியம்மன் கோவில் அருகேயுள்ள பாலம், ரோடு போட்டு 2 ஆண்டாகியும் அந்த பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டப்படாததை கண்டித்தும் கோவில்பட்டியில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகராஜ் தலைமையில் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தங்களது கோரிக்கை மனுவை ஆர்டிஓ விஜயாவிடம் அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில் வரும் 27ம்தேதி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு காலை 10 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக காங்கிரசார் தெரிவித்தனர்.  இதில் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் காமராஜ், மாவட்ட பொருளாளர் கேசவன், நகர செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன், வக்கீல் மகேஷ்குமார், மாவட்ட பொதுசெயலாளர் முத்து, ராஜேந்திரன், நல்லமதி உட்பட பலர் பங்கேற்றனர்.  

Related Stories: