அரசு பஸ்கள் புறக்கணிப்பதால் வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவியர் அவதி

திருமங்கலம், பிப்.20: திருமங்கலம் ஒன்றியம் வாகைகுளத்திலிருந்து மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் செல்லும் டவுன்பஸ் மாலை வேளைகளில் வருவதில்லை என கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருமங்கலம் ஒன்றியத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ளது வாகைகுளம் கிராமம். இங்கிருந்து மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் மற்றும் திருமங்கலத்திற்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரைக்கு தினசரி 6 முறை வாகைகுளத்திலிருந்து டவுன்பஸ்கள் சென்று வருகின்றன. வாகைகுளம், சின்னகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த டவுன்பஸ்சை நம்பியுள்ளனர்.

இந்தநிலையில் கடந்த இரண்டு மாதகாலமாக வாகைகுளத்திற்கு மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்டிலிருந்து மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையில் சரிவர இயக்கப்படுவதில்லை. வாகைகுளம் செல்லும் டவுன்பஸ் இந்த நேரங்களில் மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்டிலிருந்து மற்ற பகுதிக்கு மாற்றி இயக்கப்படுவதால் கிராமமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. பல பயணிகள் கருமாத்தூர் வந்து ஆட்டோபிடித்து வாகைகுளத்திற்கு வரும்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள், பணிமுடித்து திரும்பும் கிராம பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து கிராமபொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ``மதுரையிலிருந்து சரியான நேரத்திற்கு வாகைகுளத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஒருசில நாள்களில் டிரைவர் பற்றாக்குறையால் காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். விரைவில் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: