சுவாமி ஊர்வலம் இல்லாத சித்திரை வீதிகள்

மதுரை, பிப். 20: சித்திரை வீதிகளில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி மற்றும் பாதாளச்சாக்கடை பணிகள் காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன், சுவாமி ஊர்வலம் இல்லாததால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதனைக் காண உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ேடார் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் 4 சித்திரை வீதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் உலா வரும். ஆனால் கடந்த 5 மாதமாக சித்திரை வீதிகளில் பழைய பேவர் பிளாக் கற்களை மாற்றி புதியதாக கற்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சுவாமி ஊர்வலம் சித்திரை வீதிகளில் நடைபெறவில்லை.

தற்போது மாசி திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் சுவாமி சித்திரை வீதிகள் மற்றும் தெற்கு ஆவணி மூல வீதி சென்று வரும். ஆனால் பாதாளச்சக்கடை கட்டும் பணியின் காரணமாக அந்த வழியும் சுவாமி ஊர்வலம் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வருடதோறும் நடக்கும் வீதி உலா நடைபெறாததால் பக்தர்கள் பெரும் வேதனையில் உள்ளனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், `` மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருவிழா காலங்களில் தொடர்ந்து சுவாமி ஊர்வலத்தை பார்க்க கிராமங்களில் இருந்து வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். ஆனால், கடந்த 5 மாதமாக திருவிழா காலத்தில் கூட அம்மன் மற்றும் சுவாமியை வெளியில் தரிசனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, கற்கள் மற்றும் பாதாளச்சாக்கடை பணிகளை வேகப்படுத்த கோயில் நிர்வாகம் மாநகராட்சியை வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.

முடங்கி கிடக்கும்பேட்டரி கார்கள்

கோயிலுக்கு வரும் வயதான பக்தர்கள் மற்றும் சிறு குழந்தைகள் சித்திரை வீதிகளில் சுற்றி வர மாநகராட்சி சார்பில் பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஒரு நபருக்கு ரூ.10 செலுத்தினால் கோயிலைச் சுற்றி வந்து அதே இடத்தில் இறங்கி செல்லாம் என ஐந்திற்கும் மேற்பட்ட பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன. இந்த வாகனங்களும் கற்கள் பதிக்கப்பட்டதால் ஓரம் கட்டி நிறுத்தப்பட்டு விட்டது. வாகனங்கள் முடங்கிப்போய் உள்ளதால், முதியவர்கள் பெரும் அவதிப்பட்டு தான் கோயிலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: