நீட்தேர்வு பயிற்சி பெறும் மாநகராட்சி மாணவிகளுக்கு இலவச ஆட்டோ வசதி

மதுரை, பிப்.20: நீட்தேர்வு பயிற்சி பெறும் மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கம்ப்யூட்டரும் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுககு அவ்வை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இம்மாணவிகளுக்கு நீட், ஐஐடி உள்ளிட்ட அரசு நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சி வழங்கப்படுகிறது. தனி வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ் வசதி, இலவச நோட்டு புத்தகங்கள், வழிகாட்டுதல் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, இம்மாணவிகள் பயிற்சி வகுப்பிற்கு வந்து செல்வதற்கு வசதியாக இலவச ஆட்டோ வசதி மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது. தற்போது தனியார் சமூக பொறுப்பு நிதியின் கீழ் நிறுவனத்தின் பங்களிப்புடன் நவீன 5 கணிப்பொறிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி வளாகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக படித்து வரும் சுமார் 1000க்கும் மேற்பட்டவர்களின் வசதிக்காக இலவச இணையதள வசதி வழங்குவதற்காகவும் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவிற்கு வருகை தரும் நடைபயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச இணையதள வசதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கமிஷனர் விசாகன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் துணை கமிஷனர் நாகஜோதி, கல்வி அலுவலர் விஜயா, பைபர் நெட் துணைத்தலைவர் நாராயணன், கிளை மேலாளர் நரசிம்மன், ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: