ஒட்டன்சத்திரம் ஜிஹெச் முன்பு மீண்டும் நிழற்குடை வேண்டும்

ஒட்டன்சத்திரம், பிப். 20: ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பஸ்களிலே வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையை ஒட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவிகள் வசதிக்காக தாராபுரம் சாலையில் அரசு மருத்துவமனை முன்பு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது சாலை விரிவாக்க பணிக்காக இந்த நிழற்குடையை அகற்றி விட்டனர்.

நிழற்குடை இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பள்ளிக்கு வரும் மாணவிகள் பஸ்சிற்காக மணிக்கணக்கில் வெயில்,

மழையில் காத்திருக்கும் அவலம்ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் அதிக வெப்பம் காரணமாக சிலர் மயக்கமடைந்தும் விடுகின்றனர். இதற்கிடையே இந்த நிழற்குடையை சம்பந்தமே இல்லாத இடத்திற்கு மாற்றி அமைக்க போவதாக கூறப்படுகிறது. அங்கு மாற்றி அமைத்தால் நிழற்குடை யாருக்குமே பயனில்லாமல் போகும் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு பழைய இடத்திலேயே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: