சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட முயற்சி 2000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு

திண்டுக்கல், பிப். 20: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், சென்னை தடியடியை கண்டித்தும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை 2000க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். குடிமக்களின் தேசிய பதிவை ரத்து செய்ய வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவை ஏற்கமாட்டோமென வலியுறுத்தி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கேரளா, ராஜஸ்தான், புதுவை மாநிலங்களில் மத்திய அரசின் இச்சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் இச்சட்டங்களை அமல்படுத்த மாட்டோமென சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், இச்சட்டம் தொடர்பாக நடந்த சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல்லில் பிப்.19ம் தேதி அனைத்து ஜமா அத்துல் உலமா சபை, இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் பல்வேறு கட்சியினர் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று திண்டுக்கல்- கரூர் நான்கு வழிச்சாலையில் உள்ள இணைப்பு சாலையில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக கிளம்பி கலெக்டர் அலுவலகம் வந்து முற்றுகையிட முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பல்வேறு தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர்.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகம் வாயில் எதிரே பாலத்தின் அடியில் நின்றவாறு மத்திய, மாநில அரசு–்களை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். தடையை மீறி நடந்த இந்த ஊர்வலத்தையொட்டி திண்டுக்கல் பைபாஸ் சாலை மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: