×

மேச்சேரியில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளால் மாசடையும் நிலத்தடி நீர்

மேட்டூர், பிப்.20: மேச்சேரி அருகே கைகாட்டி வெள்ளார் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், கைகாட்டி வெள்ளாரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. முறையாக அனுமதி பெறாமல் இயங்கி வரும் இந்த சாயப்பட்டறைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இங்கு பத்து இடங்களில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் சாயக்கழிவுகள் நேரடியாக குடியிருப்புகளின் கழிவு நீர் செல்லும் சாக்கடையில் திறந்து விடப்படுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. கடும் குடிநீர் பஞ்சம் உள்ள நிலையில், நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதால் ஆழ்துளை கிணற்று நீரையும், விவசாய கிணற்று நீரையும் பயன்படுத்த முடியாமல், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குடிநீர் குழாய்களில், மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, சாயப்பட்டறைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் காவிரி குடிநீரும் பெதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பல முறை புகார் அனுப்பியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாயப்பட்டறைகளுக்கு விறகு அடுப்பு மட்டுமின்றி, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பிளஸ்டிக் பைகளை குப்பைகளில் வீசுவதால், மழை நீர் சேமிப்பிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் இந்த சாயப்பட்டறைகளை உடனடியாக அகற்றாவிட்டால், சேலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று சேலம் மாவட்ட மக்கள் நல கமிட்டி தலைவர் பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து மேச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மாலினியிடம் கேட்டபோது, தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

Tags : Mecheri ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு சாவு