×

பெண்களுக்கான அரசு தங்கும் விடுதியில் தொடரும் அவலம்

சேலம், பிப். 20: சேலம் போடிநாயக்கன்பட்டியிலுள்ள பெண்களுக்கான அரசு தங்கும் விடுதியில், பல்வேறு அவலங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக முதல்வரிடம் மகளிர் அமைப்புகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.   சேலம் போடிநாயக்கன்பட்டியில், சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 55பேர் தங்கியிருந்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் பல்வேறு அவலங்கள் இருப்பதாகவும், அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாகவும் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உழைக்கும் மகளிர் அமைப்புகள் சார்பில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

போடிநாயக்கன்பட்டி அரசு மகளிர் விடுதியில், தண்ணீர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் வெளியில் இருந்து விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. இதேபோல், மாணவிகளிடம் பணத்தை பெற்று வாங்கிய நாப்கின் எரிப்பதற்கான இயந்திரமும் செயல்படாமல் கிடக்கிறது. அனைத்து தேவைகளுக்கும் இங்கு தங்கியுள்ள பெண்களிடம், பணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மாதத்தில் 15நாட்கள் விடுமுறை எடுத்தாலும், முழு மெஸ் பில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஏதாவது கேட்டால் விடுதியை விட்டு வெளியேறச் சொல்லி மிரட்டுகின்றனர். இது குறித்து கேள்வி கேட்கும் பெண்களை, மற்றவர்கள் முன்பு நிற்க வைத்து அவமதிக்கின்றனர். விடுதி பெண்கள் மற்ற பெண்களிடம் பேசக்கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர். இது போன்ற பல்வேறு அவலங்களால் இங்கு தங்கியுள்ள பெண்கள், கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் மெத்தனமாக செயல்படுகின்றனர். எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இது குறித்த புகார் எதுவும் எங்களிடம் வரவில்லை. வந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Tags : women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது