×

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி வழக்கில் கைதான 2 பேரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை

சேலம், பிப்.20: சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், கைதான 2 பேரை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம்  தாதகாப்பட்டி குமரன் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(51). இவரது மகன் வினோத்குமார், ஓமலூர் பக்கமுள்ள மானத்தாள் தாண்டவனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(49). இவர்கள் மூவரும் இணைந்து, சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே “ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிறுவனத்தை  நடத்தி வந்தனர். இங்கு ₹1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதத்திற்கு ₹20ஆயிரம் வழங்கப்படும் எனவும், 12 மாதங்களுக்கு பிறகு 4 மாத இடைவெளியில் கூடுதல் உறுப்பினர்களை சேர்த்து விடவேண்டும் எனவும், அதன் பிறகு மாதம் ₹4 லட்சம் வரை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி ஏராளமானோர், பணத்தை டெபாசிட் செய்தனர். சேலம் சின்னதிருப்பதி அபிராமி கார்டன் பகுதியை சேர்ந்த சிவா என்பவர், சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியம் ஆகியோரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான வினோத்குமாரை தேடி வருகின்றனர். இந்நிலையில், பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேலம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.  இருவரையும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று இருவரையும் காவலில் எடுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், இவர்கள் எத்தனை பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டனர்?. சொத்துக்கள் ஏதாவது வாங்கி உள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்