×

சேலத்தில் அனைத்து கிராமங்களிலும் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

சேலம், பிப்.20:சேலம் மாவட்ட விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் கவுரவ நிதி பெறுஞும் பயனாளிகள் அனைவருக்கும் விவசாய கடன் அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் விவசாயக் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் கிராமங்கள் வாரியாக வரும் 25ம் தேதி வரை வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை மற்றும் வங்கித் துறை அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. விவசாய கடன் அட்டை மூலம்  விவசாயம் செய்வதற்கு ₹1.60 இலட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் வேளாண் இடுபொருட்களான விதைதள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கவும் மற்றும் உற்பத்திக்குத் தேவையான நிதி உதவி பெறவும் முடியும். மேலும், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வேளாண் சார்ந்த மற்றும் சாராத தொழில்களுக்கு முதலீடு செய்யவும் கடன் பெறலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து கிராமங்களிலும் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.

விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள், ஒரு பக்க விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் போன்ற ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வங்கி கிளை அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மேற்கண்ட ஆவணங்களுடன் நேரடியாக தொடர்புடைய வங்கி மேலாளரிடமும் அளிக்கலாம். இந்த சிறப்பு முகாம்கள் மூலம் காலாவதியான விவசாய கடன் அட்டைக்கு மாறாக புதிய கடன் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : issuance ,Special Camp for Agricultural Credit Card ,Salem ,villages ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!