ஆத்தூர் தெற்குகாடு ரயில்வே பாலத்தை எம்பி நேரில் ஆய்வு

ஆத்தூர், பிப்.20: ஆத்தூர் ரயில் நிலையம் பகுதியில், தெற்குகாடு தமிழ்நாடு வீட்டு வாரிய குடியிருப்பு பகுதி பைத்தூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்ல, ரயில்வே கீழ்மட்ட பாலத்தை கடத்து செல்ல வேண்டியுள்ளது. இந்த பாலத்தின் இணைப்பு சாலைகள் இருபுறமும், மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த  முடியாத நிலையில் உள்ளது. மேலும் மழை காலங்களில் இந்த பாலத்தின் அடிப்பகுதியில், மழை நீர் குளம்போல் தேங்குவதால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கள்ளக்குறிச்சி எம்பி கௌதம்சிகாமணியிடம் தொடர்ந்து புகார் மனுக்களை அளித்து வந்தனர். இதனையடுத்து நேற்று, எம்பி கௌதம்சிகாமணி ரயில் நிலையப்பகுதியில் உள்ள கீழ்மட்ட பாலத்தையும், அதன் இணைப்பு சாலைகளையும் நேரில் பார்வையிட்டார். பின்னர், உடனடியாக இருபுறமும் சீரான போக்குவரத்து நடைபெறும் வகையில், பிளவர் கற்களை கொண்டு சாலை அமைக்கவும், மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த ஆய்வின் போது, ஆத்தூர் நகர திமுக செயலாளர் பாலசுப்ரமணியம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மாணிக்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் காசியம்மாள், நகர இளைஞரணி அமைப்பாளர் கோபி, மாணவரணி பர்கத் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: