×

ஊட்டி - கூடலூர் சாலையில் தனியார் மண்டபத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

ஊட்டி, பிப். 20:ஊட்டி - கூடலூர் சாலையில் கூட்செட் பகுதியில் தனியார் மண்டபத்தில் விழாக்களின்போது வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் கூட்ஷெட் பகுதி உள்ளது. இங்கு அரசு கல்லூரி மாணவர் விடுதி அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் திருமண விழாக்கள் மற்றும் மற்ற விழாக்கள் நடத்தும்போது, அதில் கலந்துகொள்ள வருபவர்கள் ஊட்டி - கூடலூர் சாலையின் இரு புறங்களிலும் நிறுத்திக் கொள்கின்றனர். இப்பகுதி சற்று குறுகலாகவும், மேடான பகுதியாகவும் உள்ளது. இச்சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்திக் கொள்வதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலை ஏற்படுகிறது.குறிப்பாக, அரசு பஸ்கள் இரு மார்க்கத்திலும் வந்தால், இப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாதிக்கின்றனர். ஆனால், போலீசாரோ இதனை கண்டுகொள்வதில்லை. இதனால், எப்போதுமே இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

நேற்று ஊட்டி நகரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், நகருக்குள் செல்லும் அனைத்து சாலைகளிலும் சுமார் 2 மணி நேரத்திற்கு பின் வாகன ஓட்டிகளை அனுமதித்தனர்.அப்போது பெரும்பாலான வாகனங்கள் இவ்வழித்தடத்தையே பயன்படுத்தினர். ஆனால், இங்கு இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். எனவே, ஊட்டி - கூடலூர் சாலையில் கூட்ஷெட் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொள்பவர்கள் சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : hall ,Ooty - Cuddalore Road ,
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்