×

பொதுமக்கள் சார்பில் மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணம்

கூடலூர், பிப்.20:மசினகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் சார்பாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.மசினகுடி பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மகப்பேறு, காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காக மசினகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அதற்காக 2 மருத்துவர்களை மாவட்ட சுகாதாரத்துறை பணியமர்த்தி உள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்களின் பிரசவத்திற்காக தனி மருத்துவமையமும் செயல்பட்டு வருகிறது.

இந்த சுகாதார நிலையத்தில் இருந்த ஈ.சி.ஜி. எந்திரம் உள்ளிட்ட சில மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. பல மாதங்களாக பழுதுகள் சரி செய்யப்படாமல் இருந்தது. இதனால் அவசர சிகிச்சைக்காக அங்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக இதயநோய் காரணமாக சுகாதார நிலையத்திற்கு வந்த சில நோயாளிகளுக்கு என்ன பாதிப்பு? என்பதை கூட தெரிந்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இதனால் மசினகுடியிலிருந்து மருத்து சிகிச்சைக்காக கூடலூர் அல்லது ஊட்டிக்கு செல்லும் வழியிலேயே சிலர் இறந்துள்ளனர். இதனையடுத்து மசினகுடி பொதுமக்கள் சார்பாக ஈ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கி நன்கொடை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணியில் மசினகுடி இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் தாங்களாக முன் வந்து ஈ.சி.ஜி. மருத்துவ கருவி, 2 பேட்டரிகளுடன் கூடிய இன்வேட்டர் கருவி, வெண்ணீர், குளிர்ந்த குடிநீர் பெற்று கொள்ள ஒரு வாட்டர் பியூரிபயர், நெபிலேசர் உள்ளிட்ட ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

 அவ்வாறு வழங்கிய மருத்துவ கருவிகள் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட ஆரம்ப சுகாதார துணை இயக்குனர் பாலுசாமி தலைம வகித்தார். கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மசினகுடி எஸ்.ஐ. நிக்கோலஸ், வனச்சரகர்கள் மாரியப்பன், காந்தன், மசினகுடி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மாது, கார்த்திக், வினோத், ஊராட்சி தலைவர் மாதேவி, துணைத் தலைவர் நாகேஷ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்களிடம் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான கருவிகளை பொதுமக்கள் முன்னிலையில் மசினகுடி இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சார்ப்பில் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags : public ,Masinagudi Primary Health Center ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...