காரமடை அரங்கநாதர் கோயிலில் மார்ச் 8ம் தேதி தேரோட்டம்

மேட்டுப்பாளையம்,பிப்.20: காரமடை அரங்கநாதர் கோயிலில் மாசி மாத தேர்த்திருவிழா வருகிற 8ம் தேதி நடைபெற உள்ளது.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் ஒன்றான காரமடை அரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு மாசி தேர்த்திருவிழா வருகிற 8ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக வரும் 1ம் தேதி இரவு 11.30 மணி அளவில் கிராம சாந்தியுடன் தேர்த்திருவிழா துவங்குகிறது. 2ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு அன்ன வாகனத்திலும், 3ம் தேதி சிம்ம வாகனத்திலும், 4ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 5ம் தேதி இரவு 8.30 மணிக்கு கருட சேவையும் நடைபெற உள்ளது.

6ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 7ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இரவு 8.30 மணி அளவில் யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 8ம் தேதி அதிகாலை அரங்கநாதர் ஸ்ரீதேவி,பூதேவி சமேதமாக  திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.தொடர்ந்து 9ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா, 10ம் தேதி தெப்போற்சவமும், 11ம் தேதி சந்தான ேசவை மற்றும் 12ம் தேதி வசந்தம் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார், கோயில் நிர்வாகக்குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: