கட்டிட வரைவு அனுமதி பெற புரோக்கர்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார்

கோவை, பிப்.20:கோவை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்ன ராமசாமி, உதவி கமிஷனர்கள் சுந்தர்ராஜன், சரவணன், செந்தில்குமார் ரத்தினம், மகேஷ் கனகராஜ், ரவி, செந்தில் அரசன், நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், பார்வதி, ஞானவேல், சசிபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் சார்பில் 57 மனுக்கள் வழங்கப்பட்டது. மாநகராட்சி உரிமம் பெற்ற கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கனகசுந்தரம் அளித்த மனுவில், ‘‘கட்டிட வரைவு அனுமதி பெறும் ஆன்லைன் திட்டத்தில் சிக்கல், சிரமம் இருக்கிறது. தொழில் நுட்ப அறிக்கை பெற, பிரீ டிசிஆர் முறையில் தயார் செய்த வரைபடம் அனுப்புதல் போன்ற பணிகளுக்கு 2 மாதம் ஆகிறது. 2 மணி நேரம் நடக்கவேண்டிய பணிக்கு இவ்வளவு நாட்கள் ஆவது பெரிய குறைபாடு. தொழில்நுட்ப அறிக்கை அனுப்பும் பொறுப்பை நடத்துபவரின் பணி சரியில்லை. இதை மேற்பார்வை செய்பவரும் கவனிப்பதில்லை. சில தரகர்களுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படுகிறது. ஒத்துழைக்காவிட்டால் இழுத்தடிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதில்லை. விண்ணப்பங்களின் நிலையை தெரிந்து கொள்ள முடியாத நிலையிருக்கிறது. கமிஷனர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும் பைல் திரும்ப வருவதில்லை. அனுமதி ஆவணங்கள் இடைத்தரகர்களுக்கு நேரிலும், மற்றவர்களுக்கு தபாலிலும் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக கட்டிட வரைவு அனுமதி வழங்குவதில்லை. ஆன்லைன் திட்டத்தை சரியாக நிறைவேற்றவேண்டும். ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தும் முறை தேவை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: