இறந்த குட்டி யானையின் அருகே நெருங்க விடாமல் 3வது நாளாக தாய் யானை பாசப்போராட்டம்

கூடலூர்,  பிப். 20: கூடலூர் அருகே வனப்பகுதியில் இறந்த குட்டி யானையின் அருகே வனத்துறையினரை நெருங்க விடாமல் மூன்றாவது நாளாக தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொச்சு  குன்னு தனியார் எஸ்டேட் பகுதியையொட்டிய வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று  கடந்த மூன்று நாட்களுக்கு முன் இறந்துள்ளது. இதையறித்த வனத்துறையினர்,  அங்கு சென்ற போது குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதையும் அருகில் 3  யானைகள் நிற்பதையும் பார்த்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் இறந்த  குட்டி யானையின் அருகே செல்ல முயற்சித்தனர். ஆனால் தாய் யானை உட்பட்ட  மூன்று யானைகள், குட்டியின் அருகே நின்று கொண்டு பாசப்போராட்டத்தில்  ஈடுபட்டதை அறிந்து அருகில் செல்வதை கைவிட்டுவிட்டனர்.தாய்  யானை 3வது நாளாக நேற்றும் குட்டியின் அருகிலேயே நிற்பதால் இறந்த  குட்டியை யானையின் உடல் கூறு ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. யானையை  தொந்தரவு செய்யாமல் யானை தானாகவே அங்கிருந்து செல்லும்வரை குட்டியின்  அருகில் செல்லும் நடவடிக்கை வனத்துறையினர் கைவிட்டு உள்ளனர்.

அப்பகுதியில் தொழிலாளர்கள்,  பொதுமக்களை யானை நிற்கும் பகுதிக்கு செல்லக் கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர்.இது  குறித்து வனத்துறையினர் கூறுகையில், தாய் யானை குட்டியை இழந்த சோகத்தில்  உள்ளதால் அதனை பட்டாசு வெடித்தோ, அல்லது சப்தம் எழுப்பியோ விரட்ட முயன்றால்  ஆத்திரத்தில் அது தாக்குதலில் ஈடுபடலாம். குறிப்பாக தாய் யானைக்கு பெண்  குட்டிகளைவிட ஆண் குட்டிகளிடம் பாசம் அதிகமாக இருக்கும். பல இடங்களில்  இறந்த பெண் குட்டி யானைகளை விட்டு தாய் யானைகள் ஒரே நாளில் வெளியேறி உள்ளன.  ஆண் குட்டிகள் இறந்த இடங்களில் இருந்த சீக்கிரமாக வெளியேறுவது இல்லை. எனவே  இப்பகுதியில் இறந்து கிடப்பது ஆண் யானை குட்டியாக கூட இருக்கலாம் என்ற  சந்தேகம் உள்ளது.மேலும் இப்பகுதியில் செந்நாய் கூட்டம் சுற்றி வருவதால்  செந்நாய்கள் இறந்த குட்டி யானையை சாப்பிட்டு விடாமல் பாதுகாக்கவும் தாய்  யானை அங்கிருந்து அகலாமல் இருக்கலாம். மேலும் இறந்த குட்டி யானையின் உடல்  கூறு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.

Related Stories: