விருப்ப ஓய்வில் செல்லும் சீனியர் போலீசார் உள்ளூர் போலீசார் இல்லாமல் போகும் அபாயம்

ஊட்டி, பிப். 20:நீலகிரி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாரில், பலர் விருப்ப ஓய்வில் செல்வதால் ஓரிரு ஆண்டுகளில் உள்ளூர் போலீசாரே இல்லாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு நிலவும் காலநிலை சமவெளிப் பகுதிகளில் இருந்து வருபவர்களை அச்சுறுத்தும். இங்கு நிலவுகள் குளிரான காலநிலை பலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. இதனால், அரசு துறைகளில் பணி மாற்றம் ஆகி வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை எப்போது வெளி மாவட்டங்களுக்கு செல்வது என எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஊட்டிக்கு மாறுதல் அளித்த நாள் முதல் மீண்டும் சமவெளிப் பகுதிகளுக்கு மாறுதல் கேட்டு உயர் அதிகாரிகளிடம் மனுக்குள் கொடுப்பது வாடிக்கையான ஒன்று. குறிப்பாக, இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பணியாற்றும் போலீசாருக்கு மிக கடினம். ஆனால், இவர்களுக்கு என்று எந்த ஒரு சிறப்பு சலுகையும் அரசு வழங்குவதில்லை. மற்ற மாவட்டங்களை போல், இங்கும் 24 மணி நேரமும் வேலை செய்கின்றனர். மழை மற்றும் பனிக் காலம் என பார்க்காமல், போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Advertising
Advertising

அதேபோல், பனிக்காலங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டுமாயின், சாதாரண உடைகள் போதாது. பல வெம்மை ஆடைகளை அணிந்து பணியாற்றினால், மைனஸ் டிகிரிக்கு வெப்பநிலை செல்லும் போது குளிர் எடுக்கும். இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் காலம் நேரம் பார்க்காமல் பல போலீசார் (பெண் போலீசார் உட்பட) அனைவரும் பணியாற்றி வருகின்றனர். தற்போது பணியாற்றி வரும் பலரில் 20 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை அனுபவம் வாய்ந்த போலீசார். இவர்கள், தமிழகத்தில் மற்ற போலீசார் செய்யும் அதே பணியைத்தான் செய்து வருகின்றனர். ஆனால், தற்போது இவர்களில் பலர் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்து வெளியேறிவிட்டனர். தற்போது பணியாற்றி வரும் ஒரு சிலரும் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், 25 ஆண்டுக்கு மேல் பணியாற்றிய பலருக்கும் தற்போது எஸ்.எஸ்.ஐ. மற்றும் எஸ்.ஐ. பதவி உயர்வு கிடைத்துவிட்டது. விருப்ப ஓய்வில் சென்றால் போதுமான பென்ஷன் கிடைக்கிறது.

இதனால், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான போலீசார் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர். தற்போது பணியில் இருக்கும் ஒரு சிலரும் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இருந்து கடந்த காலங்களில் அதிகளவிலான இளைஞர்கள் போலீஸ் பணிக்கு சென்றனர். ஆனால், சமீப காலமாக மிகவும் குறைந்த அளவிலான இளைஞர்கள் மட்டுமே இத்துறையை தேர்வு செய்கின்றனர். அதிலும், அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. சொற்ப அளவில் மட்டுமே பணியில் சேருகின்றனர். இதனால், தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் வெளியூர் போலீசார் மற்றும் அதிகாரிகளே பணியாற்றி வருகின்றனர். ஓரிரு ஆண்டுகளில் உள்ளூர் போலீசாரே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் பிரச்னைகள், மக்களின் கலாசாரம் உட்பட அனைத்தையும் வெளி மாவட்ட போலீசார் உள் வாங்குவதற்கே பல மாதங்கள் ஆகிவிடும். உள்ளூர் பிரச்னைகளை பேசி தீர்க்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: