குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவை, பிப்.20:குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. இதில் ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் மற்றும் மெளலமி அப்துல் ரஹீம் தலைமை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்க கோவை உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்து கோவை ரயில் நிலையம் முன்பு ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து காலை 11 மணியளவில் கோஷமிட்டவாறே கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்கள் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தேசிய கொடியை கையில் ஏந்தி சென்றனர். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர். சட்டத்தை வாபஸ் பெறக்கோரி அவர்கள் வலியுறுத்தினர்.

Advertising
Advertising

இந்த போராட்டத்தையொட்டி போலீஸ் கமிஷனர் சுமித்சரண் மேற்பார்வையில் 1384 போலீசார் கோவை கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகர போலீசார், கலவர தடுப்பு பிரிவு (ஆர்.ஏ.எப்), மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் 3 வஜ்ரா வாகனங்களை போலீசார் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர். 3 டிரோன் கேமராக்கள் மூலம் போராட்டம் கண்காணிக்கப்பட்டது. சுழல் கண்காணிப்பு கேமரா வாகனமும் போராட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் அமைத்திருந்த தடுப்புகளைதாண்டி குதிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

போராட்டம் குறித்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் கூறுகையில், ‘‘இந்த போராட்டம் முடிவல்ல. தொடக்கம். தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்’’ என்றார். இந்த முற்றுகை போராட்டத்தால் நேற்று காலை முதல் மதியம் வரை கலெக்டர் அலுவலக ரோடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு கடைகள் அடைப்புமுஸ்லிம் அமைப்புகளின் இந்த போராட்டத்தினால், ரயில் நிலையம் முன்பு துவங்கி கமிஷனர் அலுவலகம் வரை உள்ள பேக்கரி, ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் வியாபாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் வந்தடையும் தபால் நிலையம் ரோடு, ரயில் நிலைய ரோடு, கோர்ட் ரோடு ஆகியவை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தடுப்புகள் அமைக்கப்பட்டு முடக்கப்பட்டன. போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்த அறிவிக்கப்படாத போக்குவரத்து மாற்றத்தால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

Related Stories: