×

அரசு பள்ளியில் நேர்மை அங்காடி துவக்கம்

ஈரோடு, பிப். 20: ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேர்மை அங்காடி துவங்கப்பட்டது.
இதை வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார். இதில், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பீரோவில் பென்சில், பேனா, ரப்பர், பேப்பர், 80 பக்க நோட்டு, ஸ்கேல், சிவப்பு, புளூ ஜெல் பேனா அதன் விலையும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. பீரோவில் உள்ள உண்டியலில் தங்களுக்கு தேவையான பொருட்களை மாணவர்கள் எடுத்துக்கொண்டு அதற்கான தொகையை போட்டு விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை சுமதி கூறியதாவது:நேர்மை அங்காடியை பயன்படுத்துவதன் மூலம் மாணவ, மாணவிகள் கருத்தாக மட்டுமின்றி பயிற்சியாகவும் நேர்மையை கற்று கொள்வர். பொருட்களின் விலையும் அவர்களுக்கு தெரியவரும். இதனால் மாணவ, மாணவிகள் மன நிலையில் மாற்றம் ஏற்படும். விலையை கொடுத்துதான் பொருட்களை வாங்க வேண்டும் என்பதை உணர்வர். தினமும் மாலையில் உண்டியல் தொகை, பொருட்கள் சரிபார்க்கப்படும். மறுநாள் காலையில் பற்றாக்குறை இன்றி அனைத்து பொருட்களும் வைக்கப்படும். நேர்மை அங்காடியை கவனிக்க பள்ளி ஆசிரியர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். உண்டியலில் பணம் போடாமல் பொருட்களை எடுத்து செல்ல கூடாது என்ற கருத்து தினமும் இறை வணக்கத்தின் போது எடுத்துரைக்கப்படும். இதன்மூலம், பள்ளி பருவத்தில் நேர்மையை மாணவ, மாணவிகள் கற்றுக்கொள்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Government School ,Honesty Store Launch ,
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...