தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு செல்ல மாயாற்றின் குறுக்கே தற்காலிக நடைபாலம்

சத்தியமங்கலம், பிப்.20: தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு செல்ல மாயாற்றின் குறுக்கே தற்காலிக நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஊராட்சி தலைவர் மற்றும் அப் பகுதி மக்களின் சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் மாயாற்றின் கரையில் தெங்குமரஹாடா வன கிராமம் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்திற்கு பவானிசாகரில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக 25 கி.மீ. கரடு முரடாண பாதைகளில் பயணித்து பின்னர் வனப்பகுதியில் ஓடும் மாயாற்றை பரிசலில் கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்படுவதால் தெங்குமரஹாடா, புதுக்காடு, சித்திரபட்டி, அல்லிமாயாறு, கல்லம்பாளையம்  கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாயாற்றை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடுவதால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சித்தலைவர் சுகுணா மனோகரன், துணைத்தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து ஆற்றின் குறுக்கே தற்காலிக நடைபாலம் அமைக்க திட்டமிட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தெங்குமரஹாடா பரிசல் துறையில் ஆற்றின் குறுக்கே கற்களை அடுக்கி தண்ணீர் செல்ல ஏதுவாக சிமெண்ட் பைப் வைத்து தற்காலிக நடைபாலம் அமைக்கும் பணி நடந்தது. தற்போது, தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு பஸ்சில் செல்வோர் அங்கிருந்த இறங்கி பரிசல் இயக்குபவர்களை எதிர்பார்க்காமல் இந்த தற்காலிக பாலம் வழியாக நடந்து சென்று எளிதாக தெங்குமரஹடா கிராமத்தை அடைய முடியும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு ரூபாய் 3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நடைபாலம் மாயாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உடைந்துவிடும் என்றாலும்கூட மழைக்காலத்திற்கு இன்னும் ஆறு மாதம் வரை உள்ளதால் அதுவரை இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் எளிதாக ஆற்றைக் கடக்க உதவும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாயாற்றின் குறுக்கே வன கிராம மக்கள் சேர்ந்து தற்காலிக நடைபாலம் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயாற்றின் குறுக்கே அரசின் சார்பில் உயர்மட்ட பாலம் கட்ட  வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ள நிலையில் புதிய பாலம் கட்ட அனுமதி கிடைக்கும் வரை தற்காலிக தீர்வாக  நடைபாலத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களே அமைத்துள்ளதாக வன கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: