சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்.க்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் பேரணி, ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப்.20: ஈரோட்டில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்.க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) எதிராக இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்திற்காக, இஸ்லாமிய அமைப்பினர் பெருந்துறை ரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகை முன்பிருந்து ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் ஹபீபுல்லா தாவூதி தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

ஆனால், அங்கு முற்றுகையிடும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கலெக்டர் அலுவலகம் அருகே தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜமாத்துல் உலமா சபை மாவட்ட பொருளாளர் ஜாபர் அலி தாவூதி, மஸ்ஜித்கள் பேரவை மாவட்ட செயலாளர் ஹனீபா ஹாஜியார், மனித நேய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் சையத் அகமத் பாரூக், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் ஹசன் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தையும், என்ஆர்சி.யையும் நிராகரிப்போம், என்பிஆர் கணக்கெடுப்பினை நடத்த மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களது அமைப்பின் கொடிகளை பிடிக்காமல், தேசிய கொடிகளை மட்டும் அவர்களது கையில் ஏந்தி போராடினர்.

Related Stories: