×

அரிமளம் பகுதி சாலையில் விபத்தை தடுக்க புதிய பாலம் கட்ட வேண்டும்

திருமயம்,பிப்.20:அரிமளம் பகுதி நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இரண்டு பாலங்களை அகற்றி புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, தற்காலிகமாக எச்சாிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் வழியாக ஏம்பல், கே.புதுப்பட்டி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் பஸ்கள், கனரக வாகனங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அரிமளம் வழியாக செல்லும் நெடுஞ்சாலை முக்கியம் என்பதால் நெடுஞ்சாலை துறை மூலம் இந்த சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரிமளம் பகுதியில் சந்திவீரன் கோயில், மீனாட்சிபுரம் வீதி பிரிவு சாலை அருகே உள்ள இரண்டு பாலங்கள் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாக வரும் பட்சத்தில் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த பகுதியில் பள்ளி மாணவர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அதிகாரிகள் குறுகிய பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தற்காலிகமாக வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் எச்சாிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : bridge ,accident ,area road ,Arimalam ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!