×

பொன்னமராவதி வட்டார விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெற விண்ணப்பிக்க அழைப்பு

பொன்னமராவதி, பிப்.20: பொன்னமராவதி வட்டார விவசாயிகள் விவசாயக் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொன்னமராவதி வட்டாரத்தில் கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். விவசாயக் கடன் அட்டை(கிசான் கிரிடிட் கார்டு) திட்டம் அனைத்து வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உழவர்கடன் அட்டை மூலம் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்கும் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஈட்டுறுதி இல்லாமல் ரூ.1.60 லட்சம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3.00 லட்சம் வரையிலும், 7 சதவீதம் வட்டியுடன் கடன் பெறலாம். உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் 3 சதவீதம் வட்டித் தொகை சலுகையாக வரவு வைக்கப்பட்டு, மீதமுள்ள 4 சதவீதம் வட்டி மட்டுமே செலுத்தினால் போதும். கிஸான் அட்டை 5 ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம். பிரதம மந்திரியின் சம்மன் நிதி திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்–்கு விவசாயக் கடன் அட்டை பெறவில்லையெனில் அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் நேரடியாக சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயக் கடன் அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.இதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, நில உடைமை ஆதாரம், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், 4 புகைப்படங்கள். எனவே இந்த திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி தெரிவித்துள்ளார்.


Tags : Ponnamaravathi ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு