×

உடலில் தேமல் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக அறிவுரை

கொள்ளிடம்,பிப்.20: உடலில் தேமல் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று தொழுநோய் துணை இயக்குநர் சங்கரி தெரிவித்தார்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு திட்டத்தின் படி தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பபிதா தலைமை வகித்தார். முகாமில் தொழுநோய் விழிப்புணர்வு கோலப்போட்டியை மாவட்ட தொழுநோய் துணை இயக்குநர் சங்கரி துவக்கி வைத்து பேசுகையில், தொழுநோய் என்பது மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியால் ஏற்பட கூடியது. இதன் அறிகுறி உணர்ச்சியற்ற தேமலாகும். இதனை விரைவில் கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். உடலில் தேமல் ஏற்பட்டால், அழகு தேமல் என்று அலட்சியம் செய்யாமல் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்றார். தொழுநோய் விழிப்புணர்வு கோலப்போட்டியில் கலந்து கொண்ட செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சங்கரி பரிசுகளை வழங்கினார். டாக்டர்கள் பாரிவளவன், புனிதவள்ளி, சபிதாபேகம், மருந்தாளுநர் வேலாயுதம் மருத்துவர் சாரா மேற்பார்வையாளர் சதாசிவம், சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன், சதீஷ் மற்றும் சுகாதார செவிலியர்கள் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு