×

நாகையில் 3வது நாளாக ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் பாதுகாப்பின்றி சாலையில் படுத்துறங்கும் இளைஞர்கள்

நாகை, பிப்.20: நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்து வரும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க வரும் இளைஞர்கள் நாகை-நாகூர் சாலையில் இரவு நேரங்களில் உறங்குவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாகை பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முகாம் வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுகை, நாகை, திருவாரூர் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 14 மாவட்ட இளைஞர்களும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய 15 மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் கலந்து கொள்கின்றனர். ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக வரும் இளைஞர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே வந்து விடுகின்றனர்.

ஆனால் முகாம் நடைபெறும் விளையாட்டு அரங்கத்தின் உள்ளே செல்ல அதிகாலை 2 மணிக்கு மேல் தான் அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி முகாமில் பங்கேற்க வரும் இளைஞர்கள் நாகை நாகூர் மெயின் ரோட்டில் தங்குகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையிலேயே படுத்து உறங்குகின்றனர். சாப்பிடுவதற்கும், டீ உள்ளிட்ட குளிர்பானங்கள் குடிப்பதற்கும் சாலைகளை கடந்து எதிர்புறம் உள்ள கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் முகாமில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் எந்த நேரமும் சாலைகளை கடந்து அங்கும், இங்குமாகவே செல்கின்றனர்.நாகை-நாகூர் சாலை என்பது மிகவும் பிரதான சாலை. நாகையில் இருந்து புதுச்சேரி, கும்பகோணம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு எந்த நேரம் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும். அதே போல் புதுச்சேரி, சென்னையில் இருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வேளாங்கண்ணி நோக்கி இந்த சாலை வழியாக வந்து கொண்டே இருக்கிறது.

இதை தவிர இரண்டு சக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் என்று எந்த நேரமும் வாகனங்கள் படையெடுக்கும் சாலையாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முகாமில் பங்கேற்ற வந்திருக்கும் இளைஞர்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் அங்கும், இங்கும் சாலைகளை கடப்பது சரியில்லை. எனவே நாகையில் இருந்து நாகூர் நோக்கி செல்லும் சாலையிலும், நாகூரில் இருந்து நாகை நோக்கி செல்லும் சாலையிலும் என்று சாலையின் இரண்டு பகுதிகளிலும் தற்காலிக தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும். அதே நேரத்தில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இளைஞர்கள் சாலையை கடந்து செல்வார்கள். வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களை முகாம் நடைபெறும் இடத்திற்கு முன்னதாக வைக்க வேண்டும்.மேலும் போக்குவரத்து பணிமனைகள் மூலம் நடத்துனர், ஓட்டுநர் ஆகியோரிடம் சம்பந்தபட்ட இடத்தில் செல்லும் போது கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவிப்பதுடன், அந்த இடத்தில் இளைஞர்கள் ஏறவும், இறங்கவும் அனுமதி கொடுக்க வேண்டும். ராணுவத்தில் சேருவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் இளைஞர்களை பாதுகாக்கவும், வழிகாட்டவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வரவேண்டும். எதற்கு எல்லாம் வழிகாட்டும் தொண்டு நிறுவனங்கள் நமது நாட்டை பாதுகாக்க ராணுவத்தில் சேர வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டுவது வரவேற்பாக அமையும். விடிய, விடிய காத்திருக்கும் இளைஞர்களுக்கு இலவசமாக குடிநீர் போன்றவற்றை விநியோகம் செய்ய முன்வரலாம். இதுபோன்ற பாதுகாப்பு பணிகளை வழங்கினால் இளைஞர்கள் மேலும் உற்சாகம் அடைவார்கள் என்று நாகை நகர பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (19ம் தேதி) திருநெல்வேலி, கரூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முகாம் நடந்தது. இன்று (20ம் தேதி) பெரம்பலூர், திருவாரூர், விருதுநகர், நாகை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், நாளை (21ம் தேதி) ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் சோல்சர் ஜெனரல் ஜெனரல் டியூட்டி பணிக்கு முகாம் நடக்கிறது. வரும் 22ம் தேதி 15 மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சோல்சர் டெக்னிக்கல் பணிக்கு முகாம் நடக்கிறது.
வரும் 23ம் தேதி அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகை, பெரம்லூர், புதுகை, ராமநாதபுரம், தஞ்சை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், 24ம் தேதி திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர், காரைக்கால், சிவகங்கை ஆகிய ஆகிய 5 மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சோல்சர் டிரேஸ்மேன் பணிக்கு முகாம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 2 நாட்கள் தேர்வு செய்யப்பட்டவர்களின் அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. வரும் 26ம் தேதி ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Tags : army ,
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...