×

நெல் மூட்டைகளை விற்க முடியாமல் அவதி தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திடீர் மூடல் நிலுவைத்தொகை வழங்கிய பின் திறப்பதாக அதிகாரி தகவல்

வந்தவாசி, பிப்.20: வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நேற்று திடீரென மூடப்பட்டது. விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்கிய பின்னர் திறக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாஞ்சரை, தென்தின்னலூர், மழையூர், அரியம்பூண்டி, சீயமங்கலம், வெடால், சித்தருகாவூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல்மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் சேத்துப்பட்டு பகுதியை வியாபாரி ஒருவர், விவசாயிகளிடம் ₹2 கோடிக்கும் மேல் நெல்மூட்டைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.இதற்கான பணத்தை நெல் கொள்முதல் செய்த 2 நாட்களில் வழங்க வேண்டுமாம். ஆனால், 2 மாதமாக பணத்தை வழங்காமல் காலம் கடத்தி வந்ததால் கடந்த மாதம் மட்டும் 2 முறை விவசாயிகள் மறியல் போராட்டம் செய்தனர்.அப்போது, 2 நாட்களில் பணம் தருவதாக உறுதியளித்த ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர், ₹1 கோடி பட்டுவாடா செய்த நிலையில் மீதமுள்ள ₹1 கோடியை நிறுத்தி வைத்தனர். இதனை கண்டித்து கடந்த 13ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மேற்பார்வையாளர் நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை விவசாயிகள் நம்பி காத்திருந்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே நிலுவையில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்யும் பணி நடப்பதால், விவசாயிகள் யாரும் நெல் மூட்டைகளை தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று எந்தவொரு அதிகாரியின் கையெழுத்து மற்றும் முத்திரைகள் எதுவும் இல்லாமல் மெயின்கேட்டில் ஒட்டிவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பூட்டி ைவத்துள்ளனர்.இதையறியாமல், நேற்று காலை நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் அலுவலகத்தில் இருந்து ஒட்டப்பட்டதா அல்லது வெளிநபர்கள் யாராவது ஒட்டியுள்ளார்களா என சந்தேகம் ஏற்படும் நிலையில் இருந்தது.

2 மாதங்களாக பல கட்ட போராட்டத்திற்கு பிறகு, ஒரே வியாபாரி ஒட்டு மொத்த நெல் மூட்டைகளை வாங்கி கொண்டு பணம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதாகவும், அதற்கு உடந்தையாக ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் உள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று ஆன்லைனில் பண பட்டுவாடா நடப்பதாக கூறி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திடீரென மூடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரோகேஷ் கூறுகையில், `சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வியாபாரி ஜனவரி மாதம் நெல் கொள்முதல் செய்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ₹35 லட்சம் வரை வழங்க வேண்டியுள்ளது. நிலுவைத்தொகை உள்ளதால் விவசாயிகள் அடிக்கடி போராட்டம் நடத்துவதாலும், விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் பண பட்டுவாடா செய்வதாலும், நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தியுள்ளோம். இதற்கான அறிவிப்பை ஒட்ட அறிவுறுத்தி இருந்தேன்'''' என்றார்.

Tags : Avadi Desur Regulatory Sales Center ,closing ,
× RELATED யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க...