கண்ணமங்கலம் அருகே பரபரப்பு மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிய கூலித்தொழிலாளி ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

கண்ணமங்கலம், பிப்.20: கண்ணமங்கலம் அருகே மனைவி, மாமியாரை கூலித்தொழிலாளி சரமாரியாக கத்தியால் வெட்டினார். ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கண்ணமங்கலம் அடுத்த கல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வரசு(43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி(28). தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். அதேபோல், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஜெயந்தி கோபித்துக் கொண்டு, 5 புத்தூர் கொல்லை மேட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று மாலை 5 புத்தூர் கொல்லைமேட்டிற்கு சென்ற செல்வரசு, தனது மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தாராம். ஆனால், அவர் வர மறுத்துவிட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வரசு, மனைவி ஜெயந்தியை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினாராம். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாமியார் விஜயா தடுக்க வந்தபோது அவரையும் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, அங்கிருந்து சென்ற செல்வரசு கண்ணமங்கலம் போலீசில் நடந்த தகவலை தெரிவித்து சரணடைந்தார். பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயா, ஜெயந்தி ஆகிய 2 பேரையும் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிைலயில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: