வேலூர் மாநகரில்தான் இந்த அவலம் காட்பாடி சாலையில் மாதக்கணக்கில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் பாதசாரிகள் மீது சேற்றை அள்ளி வீசி செல்லும் வாகனங்கள்

வேலூர், பிப்.20:போக்குவரத்து நெரிசல் மிக்க வேலூர் காட்பாடி சாலையில் மாதக்கணக்கில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ள மாநகராட்சியில் ஏற்கனவே ஒரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வேலூர் நகரின் பிரதான பகுதியான தோட்டப்பாளையத்தில் சித்தூர்- கடலூர் நெடுஞ்சாலையின் அங்கமாக வரும் காட்பாடி சாலையின் இருபுறமும் பிரபலமான தனியார் மருத்துவமனை, திருமண மண்டபங்கள்,வழிபாட்டு தலங்கள், மிகப்பெரிய வர்த்தக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. இச்சாலையின் இருபுறமும் டிகேபி நகர், தோட்டப்பாளையம், அருகந்தம்பூண்டி குடியிருப்புகள் அமைந்துள்ளன. காட்பாடி சாலையில் ஒருபுறம் வர்த்தக வளாகங்கள் அனைத்தும் கழிவுநீர் கால்வாய் மீதே கட்டப்பட்டுள்ளன.

Advertising
Advertising

மற்றொரு புறம் மிகப்பெரிய கழிவுநீர் கானாறு மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே செல்கிறது. இது மாநகராட்சிக்கு சொந்தமானதா? அல்லது தனியார் மருத்துவமனைக்கு சொந்தமானதா? என்பதற்கு விடையை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.இக்குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், வர்த்தக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் சாலையின் இருபுறமும் உள்ள கழிவுநீர் கால்வாய்களின் வழியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும், நிக்கல்சன் கால்வாய்க்கும் கொண்டு செல்லப்படுகிறது. இக்கால்வாய்களை தினமும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து அதில் இருந்து அகற்றப்படும் சேற்றையும், திடக்கழிவுகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.ஆனால் இப்பகுதிகளுக்கு துப்புரவு பணியாளர்களே வருவதில்லை என்றும், அதனால் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக மாதக்கணக்கில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கழிவுநீர் கால்வாய் நிரம்பி வழியும் பகுதியில் பஸ் நிறுத்தமும் உள்ளது.

இப்பஸ் நிறுத்தத்தில் 2 நிமிடங்களுக்கு ஒருமுறை காட்பாடி- பாகாயம் டவுன் பஸ்களும், காட்பாடி, சித்தூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இவ்வாறு பஸ்கள் நின்று செல்லும்போதும், அவ்வழியாக வேகமாக செல்லும் வாகனங்களும் சாலையில் ஓடும் கழிவுநீரை வாரி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ள மக்கள், மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் மீது சேற்றுடன் வாரி இறைக்கின்றன.மாதக்கணக்கில் நீடிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், ‘எங்களுக்கு இந்த வேலை மட்டுமா இருக்கிறது? என்ற ரீதியில் மெத்தனமாக செயல்படுகிறது. எனவே, காட்பாடி சாலை மட்டுமல்ல நகரில் சாலைகளில் ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு சட்டென தீர்வு காணும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: