×

பாஸ்பரஸ், கால்சியம் சத்து குறைவால் கால்நடைகளுக்கு ஏற்படும் நரம்பு தளர்ச்சி, தசை செயலிழப்புக்கு தொட்டில் சிகிச்சை வேலூர் கால்நடை மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது

வேலூர், பிப்.20:பாஸ்பரஸ், கால்சியம் சத்து குறைவால் கால்நடைகளுக்கு ஏற்படும் நரம்பு தளர்ச்சி, தசை செயலிழப்புக்கு வேலூர் கால்நடை மருத்துவமனையில் தொட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கறவை மாடுகள் முக்கிய இடம் பிடித்துள்ளது. கறவை மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் விற்பனை செய்வதன் மூலமாக விவசாய குடும்பத்திற்கு தேவையான வருவாய் எளிதாக கிடைக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது கால்நடைகளை பத்திரமாக பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். பால் உற்பத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள கறவை மாடுகள் 2 அல்லது 3 கன்றுகளை ஈன்றெடுக்கிறது. அதன்பின்னர், கறவை மாடுகளின் உடல் இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படுகிறது. இன்றியமையாத பாஸ்பரஸ், கால்சீயம் சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு கறவை மாடுகளுக்கு நரம்பு தளர்ச்சி, பின்பகுதியில் தசைப்பகுதி செயலிழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்புகளால் கால்நடைகள் எழுந்து நிற்க முடியாமல் படுத்தபடி கிடந்து இறக்க நேரிடும். இதனை தடுக்கும் விதமாக வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் தொட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் நவனிதகிருஷ்ணன் கூறுகையில், 3 கன்றுகளுக்கு மேல் ஈன்றெடுக்கும் கறவை மாடுகளுக்கு பாஸ்பரஸ், கால்சீயம் சத்து குறைபாடு ஏற்படும்.இத்தகைய குறைபாட்டால் கறவை மாடுகளுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படும். கறவை மாட்டின் பின்பகுதியில் உள்ள தசைகள் செயலிழந்து நிற்க முடியாமல் படுத்தபடி இருக்கும். இதனை உரிய நேரத்தில் கவனித்து சிகிச்சை அளிக்க தவறினால் நாளடைவில் உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் கறவை மாடுகள் இறக்க நேரிடும்.எனவே, நரம்பு தளர்ச்சி மற்றும் தசை செயலிழப்பு போன்றவற்றால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

வேலூர் கால்நடை மருத்துவமனையில் இதற்கென தொட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு தளர்ச்சி, தசை செயலிந்து வரும் கால்நடைகள் உள்நோயாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டு தொட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படும். 2 முதல் 5 நாட்கள் வரை இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.எளிமையான உணவுப்பழக்கத்தின் மூலமாக கால்நடைகளுக்கு ஏற்படும் நரம்பு தளர்ச்சி, தசை செயலிழப்பு போன்ற பாதிப்புகளை தடுக்கலாம். நெல்தவிடு, உமித்தவிடு ஆகியவற்றை உணவாக அளிக்க வேண்டும். இந்த நெல் தவிட்டில் பாஸ்பரஸ், கால்சீயம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனுடன் பாஸ்பரஸ், கால்சீயம் சத்து டானிக் மருந்துகளையும் கொடுக்க வேண்டும். இதன் மூலமாக கால்நடைகளுக்கு நரம்பு தளர்ச்சி, பின்பக்க தசை செயலிழப்பு போன்ற பாதிப்புகளை எளிதாக குணப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vellore Veterinary Hospital ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்