×

போராட்ட அனுமதியை ரத்து செய்வதா? சீனியர் எஸ்பி அலுவலகத்தை திவிக, அமைப்புகள் முற்றுகை

புதுச்சேரி, பிப். 19: புதுவை கிராமப்புறங்களில் மேற்கொள்ள இருந்த கேசினோவுக்கு எதிரான போராட்ட பரப்புரை அனுமதியை ரத்து செய்ததை கண்டித்து சீனியர் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட திவிக மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 91 பேரை போலீசார் கைது செய்தனர்.
 புதுவையில் கேசினோ சூதாட்ட கிளப் தொடங்க அரசு திட்டமிட்ட நிலையில் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கடந்த மாதம் தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 6ம் தேதி நகரப் பகுதியில் பரப்புரை மேற்கொண்டு துண்டறிக்கை விநியோகித்தனர். கிராமப்புறங்களில் 3 நாட்கள் பரப்புரை செய்ய காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டு இப்பணியை தொடங்க இருந்த நிலையில் திடீரென இதற்கான அனுமதியை சீனியர் எஸ்பி அலுவலகம் ரத்து செய்தது.

 இதை கண்டித்து புதுச்சேரி, மறைமலையடிகள் சாலையில் உள்ள சீனியர் எஸ்பி அலுவலகத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நேற்று முற்றுகையிட்டனர். சுதேசி மில் நுழைவு வாயில் முன் திரண்ட தி.வி.கழகத்தினர் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்நாதன் தலைமையில் பேரணியாக வந்து முற்றுகையிட்டனர். பேரணியை அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
 தந்தை பெரியார் திக வீரமோகன், தமிழர் களம் அழகர், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். அவர்களை ஐஓபி வங்கி அருகே பேரிகார்டுகளை போட்டு தடுத்து நிறுத்தினர். அப்போது மாநில அரசு, காவல்துறைக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். கொடுத்த அனுமதியை திடீரென ரத்து செய்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
 இதையடுத்து உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையிலான போலீசார், முற்றுகையில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 91 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கரிக்குடோனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் விடுக்கப்பட்டனர். இதையொட்டி அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்ததால் ஒருமணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Siege ,Systems Siege ,SP Office ,
× RELATED தருமபுரம் மடத்தை ரவுடிகளிடம் இருந்து...