×

அமைச்சர் ஆதரவாளர் கொலை வழக்கு கோர்ட்டில் சரண் அடைந்த முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை

பாகூர், பிப். 19: கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் சாம்பு (எ) சாம்பசிவம் (34). அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர். முன்னாள் கவுன்சிலர் வீரப்பன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான இவர், கடந்த 31ம் தேதி கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிந்து பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அமுதன், அன்பரசன், மேலவாஞ்சூர் பாக்கியராஜ், கூடப்பாக்கத்தை சேர்ந்த மாறன் (எ) மணிமாறன் (22), சார்லி (எ) சார்லஸ் (22), கவியரசன் (21), வழுதாவூரை சேர்ந்த ஜெகன், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் (26), வீரசெல்வன் (26), விஜயசாரதி (20), செல்வம், பிள்ளையார்குப்பம் பாரதி (எ) ஜெகஜீவன்ராம் (33), கடலூர் அடுத்துள்ள குமராபுரத்தை சேர்ந்த பரணி (எ) பரணிகுமார் (29) ஆகியோரை கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த கொலைவழக்கில், முன்னாள் கவுன்சிலர் வீரப்பன் கொலையில் தொடர்புடைய பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், காலாப்பட்டு சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், கிருமாம்பாக்கம் போலீசார்  சிறையில் இருந்த சுபாஷை காவலில் எடுத்து விசாரிக்க புதுச்சேரி  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவின் மீது விசாரணை நடத்தி, சுபாஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரண்யா செல்வம், போலீசாருக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து, சுபாஷை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : minister ,murder ,supporters ,court ,
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...